ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு..? தரமற்ற முறையில் சலவைத்துறை கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு : சலவை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு
Author: Babu Lakshmanan9 January 2023, 8:51 am
தூத்துக்குடி அண்ணா நகர் சலவை துறையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சலவைத் துறை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்தரங்கன் அண்ணா நகரில் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி அண்ணா நகர் சலவை துறையில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்தரங்கன், அவர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட பொதுச்செயலாலர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, மாவட்ட துணைதலைவர்கள் சிவராமன், சுவைதார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மேற்குமண்டல தலைவர் சிவகணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அண்ணா நகரில் கட்டப்பட்ட சலவைத்துறை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இங்கு அமைக்கப்பட்டுள்ள சலவைத் துறை தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய தொட்டி மற்றும் நீர் தேக்க தொட்டிகள் அனைத்தும் தரமற்ற முறையில் உள்ளதாகவும், 1957-ல் காமராஜர் அவர்கள் மிகவும் தரமாக கட்டிக் கொடுத்த அறைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு 94 அறைகள் இருந்த நிலையில், அதை 66 அறைகளாக தற்போது மாநகராட்சி குறைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், இங்கு உள்ள இடத்தை வணிக ரீதியில் வியாபார நோக்கத்தோடு, சலவைத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை மாற்று கடைகளுக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
இந்த இடம் சலவை தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றும, இந்த சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். ஏழை அடிபட்ட மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் துணை நிற்கும் என்றும், இந்த இடம் அனைத்தும் சலவை தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதற்கு அவருடன் இணைந்து போராடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது, என்றார்.