டீக்கடை மாஸ்டரை கடத்திச் சென்று கொலைவெறி தாக்குதல்… திமுக பிரமுகர் கைது… கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
9 January 2024, 9:32 pm

தூத்துக்குடி அருகே டீக்கடையை அடித்து நொறுக்கி கடையின் வடை மாஸ்டர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 6வது தெருவை சார்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக பகுதி செயலாளராக உள்ளார். இவருக்கு கெளதம் (25), மற்றொரு 17 வயது மகன் மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சார்ந்த பெரியசாமி மகன் முகேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முகேஷ் உள்ளிட்ட 5 பேர் திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமாரின் மகன்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் முகேஷின் தந்தை பெரியசாமி வேலை பார்க்கும் டீ கடைக்கு சென்றுள்ளனர்.

அங்கு டீக்கடையில் இருந்த கடையின் வடை போடும் மாஸ்டர் தூத்துக்குடி தாளமுத்து நகர் சமர்வியாஸ் நகர் பகுதியைச் சார்ந்த தங்கச்சாமி மகன் சுரேஷ்குமார்(42) என்பவரிடம் பெரியசாமியின் மகன், முகேஷ் எங்கே என கேட்டுள்ளார்கள். அதற்கு சுரேஷ்குமார் தனக்குத் தெரியாது என சொல்லவும், அவர்கள் கையில் வைத்திருந்த கட்டையாலும், கையாளும் தாக்கி அவதூறாக பேசி, டீக்கடையை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

தொடர்ந்து சுரேஷ்குமாரை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கண்களை துணியால் கட்டி கடத்திக் கொண்டு சென்று காட்டிற்குள் இறக்கிவிட்டு முகேஷ் எங்கே என கேட்டு அடித்து துன்புறுத்தி தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வடபாகம் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து ஜெயக்குமாரின் மகன்கள் அளித்த புகாரின் பேரில் முகேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் திமுக கட்சி பிரமுகர் ஒருவர் டீக்கடையை அடித்து நொறுக்கியதோடு மட்டுமில்லாமல் கடையின் வடை மாஸ்டர் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1104

    1

    0