மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!
Author: Babu Lakshmanan25 April 2023, 4:21 pm
தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் லூர்து பிரான்சிஸ் (56). இவர் இன்று அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கத்தி மற்றும் அறிவாளுடன் அலுவலகத்திற்கு நுழைந்த 2 நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை சரமாரியாக கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரது அவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வர வெட்டிய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து முறப்பநாடு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக விஏஓ லூர்து பிரான்சிஸ் போலீஸில் புகார் அளித்ததாகவும், இதன் காரணமாகவே அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
0
0