கரூர், சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நம்ம ஊர் பற்றி அருமை தெரியாது : அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 2:51 pm

கரூர், சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நம்ம ஊர் பற்றி அருமை தெரியாது : அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் அட்டாக்!

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி உடன் இருந்தார்.அண்ணா சிலை அருகே உள்ள இதய தெய்வம் மாளிகை முதல் அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிங்கை ராமச்சந்திரன்,’அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆசிர்வாதத்தோடு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

கோயம்புத்தூருக்கு வரும் மக்கள் இதன் குளிர்ச்சியான காலநிலை காரணமாகவும் தண்ணீருக்காகவும் இங்கேயே தங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியினை ஐந்து ஆண்டுகளில் அதிமுக வழங்கியது.

ஆனால் இப்போது அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.’விசன் 2030′ என்கிற வகையில் கோயம்புத்தூரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் கோவை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதத்திலும் திட்டங்களை வழங்க உள்ளோம்.

கடந்த ஆட்சி காலத்தில் கோயம்புத்தூருக்கு எந்த திட்டங்களும் வந்து சேரவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் வருவதே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் செங்கலை எடுத்துக்காட்டியவர் நாடாளுமன்றத்தில் காட்டி இருக்கலாம்.

அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட கோவை, உயர்கல்விக்கான மையமாகவும் உள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் பாஜக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் திமுக கொண்டு வந்த அதிக மின்கட்டணம் காரணமாக பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இவற்றையெல்லாம் சரி செய்து கோவையை அடுத்த கட்டத்திற்கு அதிமுக கொண்டு செல்லும்.கோவையைச் சேர்ந்த தொழில்துறையினருக்கு அரணாக இருந்து அவர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத் தருவோம்.

நேரடியாக மோடியோடு தொடர்பில் இருக்கிறேன், செங்களை காட்டுகிறேன் என்பவர்களால் கோயம்புத்தூருக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் மோடியின் ஆட்சி காலத்தில் கோயம்புத்தூர் எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

கரூரிலிருந்து வந்தவர்களுக்கும் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கும் நமது ஊரை பற்றி தெரிய வாய்ப்பில்லை. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான் இங்கு உள்ள பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவன். கோவையின் வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!