ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அவலம்… தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை… குறைதீர் முகாமில் விவசாயி உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 6:10 pm

திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய நன்னிலத்தைச் சேர்ந்த விவசாயி சேதுராமன் என்பவர், கனமழையின் காரணமாக நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அதம்பாவூர், நெம்மேலி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள், கனமழையின் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

ஏற்கனவே இரண்டு நாட்களாக வயலில் நீர் தேங்கியுள்ளதாகவும், மேலும் இரண்டு நாட்கள் வயலில் நீர் தேங்கி இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்றும், வயல்களில் இருந்து நீரை வெளியேற்றும் பெரிய ஓடை வாய்க்காலில் வெங்காய தாமரை அடைத்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என பேசினார். இதற்கு இந்த பெரிய குடை வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாதே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும் போது அதிகாரிகள் இதுவரை அந்த இடத்தை வந்து பார்க்கவில்லை என்றும், நன்னிலம் வட்டாட்சியர் இதுவரை அந்த இடத்திற்கு வரவில்லை என்றும் ஆதங்கத்துடன் பேசினார். வேறு வழியில்லாமல் விவசாயிகள் நாங்களே பொக்லைன் இயந்திரத்தை ஏற்பாடு செய்து சுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை சார்பில் ஆறு ஆட்களை மட்டும் பணிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார். இதே நிலை நீடித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேற வழியில்லை என்று பேசினார். இதற்கு ஆட்சியர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஓரிரு நாட்களில் முழுவதுமாக வயலில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவிற்கு வெங்காய தாமரைகள் அகற்றப்படும், என உறுதியளித்தார்.

மேலும், ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆறு ஆட்களை வைத்து வெங்காயத் தாமரைகளை அகற்ற முடியுமான்னு தெரியவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் பொதுப்பணித்துறை தான் இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும், மக்கள் மீது அதை திணிக்க கூடாது என்று கூறியதுடன், இரண்டு நாட்களில் வெங்காய தாமரை முழுவதுமாக அகற்றி எனக்கு புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் கூறும்போது அரசு கொடுக்கும் இலவச வேட்டி சேலையை யாரும் பயன்படுத்துவதில்லை எனவே அதற்கு பதில் இலவச கொசுவலை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்றும் பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 592

    0

    0