‘என்கிட்டயே காசு கேக்குறயா’…ஓசியில் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்: திமுகவை சேர்ந்தவர் மீது போலீசில் புகார்..!!
Author: Rajesh2 March 2022, 6:50 pm
சென்னை: உணவகத்தில் ஓசி பிரியாணி வாங்கி விட்டு திமுக பிரமுகர் எனக்கூறியவர் மீது ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகூர்கனி. இவர் அயனாவரம் யு.ஐ. நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களாக கே.கே நகரைச் சேர்ந்த சேகர் என்பவர் இந்த கடைக்கு சென்று, தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி பிரியாணி, பரோட்டாவை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாகூர்கனி பணம் கேட்கும்போதெல்லாம் திமுக நிர்வாகியிடமே பணம் கேட்கிறாயா என்று மிரட்டல் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் துரித உணவகத்துக்கு சென்ற சேகர், பிரியாணி கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் நாகூர்கனி பணம் கேட்டுள்ளார்.
அவரை சேகர் தகாத வார்த்தையால் திட்டியதோடு கடையை நடத்தவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த நாகூர்கனி இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, சேகர் வேறு ஒரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளார். கட்சியில் பெரிய அளவில் எந்த பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை. நாகூர்கனி அளித்த புகார் குறித்து விசாரணை நடக்கிறது என தெரிவித்துள்ளனர்.