அரிவாளை காட்டி கொலை மிரட்டல்.. அஞ்சாமல் துணிச்சலாக போராடிய இளம்பெண் : காட்டிக் கொடுத்த சிசிடிவி.. டிஜிபி பாராட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2022, 6:33 pm
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 31).
சமீபத்தில் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ராமலட்சுமி என்பவரது வீட்டில் கோழிகள் திருட்டு போயின. இந்த திருட்டு சம்பந்தமான காட்சிகள் லாவண்யா வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
ராமலட்சுமி கேட்டதன் பேரில், லாவண்யா தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ராமலட்சுமியிடம் காட்டியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த மூவர் கோழிகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, ராமலட்சுமி, கோழி திருடிய இளைஞர்களிடம் சண்டை போட்டு, பின்னர் சமரசமாகியுள்ளனர். இந்நிலையில், தீபாவளியன்று அதிகாலை லாவண்யா வீட்டுக்கு முன்பு அந்த கோழி திருடர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். லாவண்யாவும், அவரது தாயாரும் அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அந்த இளைஞர்கள் அரிவாளுடன் கேட் மீது ஏறி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தினர்.
மேலும் கார் மீது ஏறி நின்று கோழி திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சியை ராமலட்சுமிக்கு கொடுத்தது தொடர்பாக மிரட்டல் விடுத்தனர். “யார் வீட்டில் கோழி திருடு போனா உனக்கு என்ன? சிசிடிவி கேமரா ஃபூட்டேஜை போலீஸுக்கு கொடுப்பியா… உன்னையும் உன் அம்மாவையும் வெட்டிருவோம்” என மிரட்டியுள்ளனர்.
லாவண்யா கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, கோழி திருட்டு, கொலை மிரட்டல் தொடர்பான சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் லாவண்யா போலீசில் புகார் கொடுத்தார்.
லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த பொன்பாண்டி (வயது 21), சங்கிலிபாண்டி (வயது 25), பூபேஷ் (வயது 20), கோவில்பட்டி ஸ்ரீராம்நகரை சேர்ந்த விஷ்ணு (வயது 23) இனாம் மணியாச்சியை சேர்ந்த மருதுபாண்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டியபோதும், தைரியமாக போலீசாருக்கு சிசிடிவி காட்சிகளை கொடுத்து, கோழி திருடர்களை பிடிக்க உதவிய லாவண்யாவுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.