வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த 3 பேர் அதிரடி கைது…!!
Author: Babu Lakshmanan29 March 2023, 9:15 am
தர்மபுரி அருகே சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த டிபார்ம் பட்டதாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் சாக்கம்மாள் (52) என்பவரது வீட்டில் அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சேஷசமூத்திரத்தை சேர்ந்த கவியரசன் (28), பள்ளத்தெருவை சேர்ந்த ஐயப்பன் (34) ஆகிய இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆணா..? பெண்ணா..? என நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்து தெரிவித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் புகாரின்படி அவர்கள் மூன்று பேர் மீதும் மொரப்பூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் ஸ்கேன் கருவியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்த விசாரணையில் கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்ய சாக்காம்மாள் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கருவில் பாலினம் கண்டறிய ஒவ்வொருவரிடமும் 26 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்துள்ளார். கவியரசன் டிபார்ம் படித்துவிட்டு மெடிக்கல் நடத்தி வந்துள்ளார். ஐயப்பன் ஏழாம் வகுப்பு படித்துவிட்டு கட்டிட வேலை செய்தது உள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.