டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
26 November 2024, 12:40 pm

திருவள்ளூரில் டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன் – அமுலு தம்பதி. இவர்கள் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், 3 வயதுள்ள வெங்கடலட்சுமி என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவரை கண்ணும் கருத்துமாக பெற்றோர் பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில், குழந்தை நேற்று காலையில் தேநீர் உடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டு உள்ளார். இதனையடுத்து, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கவரைப்பேட்டை போலீசார், குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tea Biscuit

மேலும், இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “எனது குழந்தைக்கு டீ உடன் பிஸ்கட் கொடுத்தோம். அப்போது அவருக்கு புரையேறி மூச்சு வாங்கியது. உடனடியாக கவரைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போகச் சொன்னார்கள்.

இதையும் படிங்க: நீலகிரியில் தொடரும் டார்ச் லைட் சிகிச்சை.. என்ன சொல்கிறது அரசு?

ஆனால், நாங்கள் தாமதம் ஆகிவிடும் எனக் கருதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, எனது குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். எனவே, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர்.

எனவே, இறுதியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்று குழந்தையைக் கொடுத்தனர்” எனத் தெரிவித்தார். இவ்வாறு டீ உடன் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 153

    0

    0