வாயில்லா ஜீவனை இப்படி வஞ்சிக்கலாமா? பசு, எருமைகள் மீது ஆசிட் வீச்சு… மர்மநபர்கள் கொடூரம்.. கண்ணீருடன் நொந்து போன விவசாயி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 2:29 pm

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லாறு அருகே மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடு உட்பட 40 எருமை மாடுகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 39 ) விவசாயி. இவர் 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்தும் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய விளை நிலத்தில் பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்தும் வருகிறார்.

மேலும் ஆடு, பசு மற்றும் எருமை மாடு என கால்நடைகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை நேரத்தில் கால்நடைகளை திரும்பவும் ஓட்டி வந்து வீட்டில் கட்டி விட்டு சென்று விடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் கால்நடைகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் ஆசிட்டை வீசியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து விவசாயி ராஜ்குமாருக்கு உடனடியாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பசு எருமை மாடுகளின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் தெரியவந்தது.

ஆசிட் வீச்சால் பசு ,எருமை மாடுகளின் முகம் மற்றும் உடலின் இரண்டு புறமும் மேல் பகுதியில் தோல் வெந்து உரிந்து கருகி காணப்பட்டது. இதனைக் கண்டதும் விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். ஆசிட் வீசியதால் எரிச்சலால் அவதிப்பட்டு வந்த 4 பசு மாடு உள்பட 40 எருமை மாடுகளின் நிலை கண்டு கண்ணீர் சிந்தினார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் தாங்கள் படும் வேதனைகளை வெளியே சொல்ல முடியாமலும் எரிச்சலை தாங்க முடியாமலும் அம்மா என்று கத்திகொண்டே கண்ணீரை தாரைதாரையாக சிந்திக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல்துறை வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தினார். கால்நடை மருத்துவ குழுவினரும் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக மர்ம ஆசாமிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்களா இதன் பின்னணி என்ன என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

கல்லார் பகுதியில் கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 604

    0

    0