நகர்மன்ற கூட்டத்தில் தண்ணீர் பாட்டில மற்றும் நாற்காலிகள் வீச்சு.. சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல் : அதிகாரிகள் வெளியேறியதால் சலசலப்பு.!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2023, 7:56 pm
நகர்மன்ற கூட்டத்தில் தண்ணீர் பாட்டில மற்றும் நாற்காலிகள் வீச்சு.. சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல் : அதிகாரிகள் வெளியேறியதால் சலசலப்பு.!!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் ஆணையாளர் கிருஷ்ணராஜன் நகராட்சி பொறியாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் பாபு தீர்மானங்கள் வாசித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள், வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலையில் மனிதக் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக நகர்மன்றத்தில் வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் ஹேமாவதி, பன்னீர்செல்வம் இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் பாதிப்பதோடு சுகாதார சீர்கேடு, மற்றும் நீர்நிலைகளில் பாதிப்பு ஏற்படும்.
மேலும் அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளதால் ஆற்றின் தன்மையும் கடல் நீரும் பெரிய அளவில் பாதிக்கப்படும் ஆகையால் இந்த திட்டம் எங்கள் பகுதியில் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
கமிஷனர் – இந்தத் திட்டம் என்பது மாவட்ட நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டு இடத்தை தேர்வு செய்தார்கள் மேலும் இந்த திட்ட மூலம் 30 வார்டுகளில் உள்ள மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் தீர ஆராய்ந்து உரிய முறையில் ஆய்வு செய்து கொண்டு வரப்படும் திட்டத்தை தடுக்க வேண்டாம்.
மேலும் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அப்போது ஒரு சில கவுன்சிலர்கள் இந்த திட்டத்தை குறித்து உரிய முறையில் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்த தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்த போது ஒன்பதாவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சத்யா திடீரென்று எழுந்து எங்கள் வார்டில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்த படவில்லை.
தற்போது உள்ள தீர்மானத்தில் எனது வார்டுக்கு திட்டம் கொண்டு வரவில்லை என பேசிக் கொண்டிருந்த போது 13 வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் அருள் பிரகாஷ் எங்கள் வார்டு தொடர்பாக தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக குறிப்பிட்டு பேசி வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது உங்கள் வார்டு தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை எனது வார்டு தொடர்பாக கோரிக்கை வைத்து பேசி வருகிறோம் என தெரிவித்த நிலையில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
அப்போது அங்கிருந்த மற்ற கவுன்சிலர்கள் அமைதியாக இருங்கள் என தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் சத்யா தனது இருக்கையில் இருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் நாற்காலியை வேகமாக தூக்கி வீசினார் .
அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அனைவரும் அமைதியாக இருங்கள் உங்கள் கோரிக்கை தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறிக் கொண்டிருந்த நிலையில் கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம் மீண்டும் அதிகரித்தது.
இதன் காரணமாக நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கூட்டம் முடிந்தது என கூறிவிட்டு கோபமாக வெளியேறினார். இதனை தொடர்ந்து அதிகாரிகளும் வெளியேறினார்கள்.
இந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என கூறி சிறிது நேரம் கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் கூட்டம் ஆரம்பிக்க யாரும் வராததால் அவர்களும் அங்கிருந்து வெளியில் வந்தனர்.
அப்போது நகர மன்ற தலைவர் அறையில் அதிகாரிகள் கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைத்து கவுன்சிலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள் .
இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பத்துடன் கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறுவதை காண முடிந்தது. மேற்படி சம்பவங்களால் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.