திருப்பூரில் விடிய விடிய கனமழை… குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் ; ஆய்வுக்குச் சென்ற மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 7:35 pm

திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, அவிநாசி பகுதியில் 144 மில்லி மீட்டர் மழையும், திருப்பூர் வடக்கு பகுதியில் 167 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக, திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெருப்பெரிச்சல் பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அதிகாலையிலேயே அங்கு சென்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியிருந்த மழை நீரை துரிதமாக அப்புறப்படுத்தினர்.

இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மும்மூர்த்தி நகர் அங்கரிபாளையம் சாலை வாலிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு சேர்ந்து சாக்கடை நீரும் சென்றது.

இதனால் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு மேயர் மற்றும் ஆணையாளரை பலமுறை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று வீட்டை இழந்து வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேசி சமரசத்தை ஏற்படுத்திய பிறகு, மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.

முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததே அவ்வப்போது மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…