வண்டலூர் சாலையில் பைக் ரேஸ்… வீலிங் செய்து ஆபத்தான பயணம்.. இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீசார்..!!
Author: Babu Lakshmanan16 December 2023, 12:02 pm
மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி காவல் ஆணையர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பைக் ரேஸ் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் குழு அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், அருமந்தை சோழவரம் வெளிவட்ட சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பைக் ரேசில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நாரவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, புழல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த லெனின் ஜான்சன், வயுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர், ரேசுக்கு பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் வீடியோ எடுக்க பயன்படுத்திய கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.