பத்திரப்பதிவு ஆபிசில் நடந்த ஐடி ரெய்டு.. வசமாக சிக்கிய பெரும் புள்ளிகள்..? கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் என தகவல்..!!
Author: Babu Lakshmanan5 July 2023, 8:54 am
திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய பிரமுகர்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாலவாயல் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள செங்குன்றம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வருமான வரி துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், நேற்று துவங்கிய சோதனையானது, தொடர்ந்து விடிய விடிய நடைபெற்றது. செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ள நிலத்தின் விவரங்கள் கோப்புகள் முறையாக உள்ளதா..?, பணப் பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா..? என அனைத்து ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்தனர். மேலும், சார் பதிவாளர் அலுவலர்களிடம் கிடுப்பிடி விசாரணையையும் நடத்தினர். வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காரணமாக, சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த சோதனையில் முக்கியப் பிரமுகர்கள் சிலரது ஆவணங்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விபரங்களை செங்குன்றம் சார்பதிவாளர் பழனி மற்றும் அங்குள்ள அலுவலர்களிடம் விடிய விடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் முக்கிய ஆவணங்களின் நகலை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
இதன் முழு விவரங்கள் வருமானவரித் துறையினரின் சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து மேலும் விசாரிக்க உள்ளனர். அந்த விசாரணை முழுமை பெற்ற பின்னரே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரப்பதிவு செய்த பெரும்புள்ளிகள் யார் என்றும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்ற விவரமும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர்.
நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்று அதிகாலை 5 .45 மணிக்கு நிறைவு பெற்றது.