மாமூல் தராததால் ஆத்திரம்… கடை உரிமையாளரை தாக்கிய செம்பு பொருட்களை பறித்துச் சென்ற கும்பல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 7:16 pm

மாமூல் பணம் கேட்டு தர மறுத்ததால் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி, செல்போன் மற்றும் 20 ஆயிரம் மதிப்பிலான செம்பு பொருட்களை திருடி சென்ற கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுகுமுடிபூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த மகேஸ்வரன் (32) என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சிருபுழல் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிராஜ், கடந்த நான்கு மாதங்களாக மாதந்தோறும் 1500 ரூபாய் மாமூல் பெற்று வந்த நிலையில், தொடர்ந்து மாமுல் தர முடியாது என மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பழனிராஜ், மணிகண்டன், நரேஷ் ஆகியோர் கொண்ட கும்பல், மாமூல் கேட்டு தராததால் ஆத்திரம் அடைந்து மகேஸ்வரனை தகாத வார்த்தைகளால் பேசி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், அத்துமீறி பழைய இரும்பு கடையில் நுழைந்து கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செல்போனையும், அங்கிருந்த பழைய செம்பு பொருட்கள் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர் மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பழனிராஜ், மணிகண்டன், நரேஷ் ஆகிய மூன்று பேர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பம் குறித்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை சிப்காட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!