பட்டப்பகலில் பயங்கரம்… பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தாலி சங்கிலி பறிப்பு ; கிராம மக்கள் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan27 March 2024, 4:10 pm
பட்டப்பகலில் பயங்கரம்… பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தாலி சங்கிலி பறிப்பு ; கிராம மக்கள் அதிர்ச்சி..!!
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கூடுவாஞ்சேரி ஊராட்சி கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமாருக்கு சரஸ்வதி (55) எனும் மனைவி உள்ளார். இவர்களின் இரு பெண் குழுந்தைகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது.
இந்த நிலையில், குமார் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. சரஸ்வதியிடம் ஒரு பெரியவர் பேசிவிட்டு சென்றதாக கூறும் நிலையில், கணவர் குமார் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது, மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குமாரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டின் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் உடலில் கழுத்து மற்றும் மார்பகம் பின்பக்க முதுகு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதாக கணவர் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து பொன்னேரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் இது போன்ற ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த கொலை நகை பறிப்பதற்காக செய்யப்பட்டதா..? வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா..? என்பது குறித்து பொன்னேரி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.