சலூன் கடை ஊழியர் மீது விசிக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
Author: Hariharasudhan19 December 2024, 1:42 pm
திருவண்ணாமலையில் சலூன் கடை ஊழியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விசிக நிர்வாகி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் சாலையில் உள்ள வேங்கிக்கால் என்னும் கிராமத்தில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் வேலை பார்த்து வந்த அஜித் மற்றும் சக ஊழியர் இருவரும், நேற்றைய முன்தினம் (டிச.17) இரவு பணி முடித்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் கடையில் இருந்து புறப்பட்டு உள்ளனர்.
அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் ஓட்டுநர், கவனக் குறைவாக பின்னோக்கி வந்ததில், இருவர் வந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக்கில் வந்த சலூன் கடை ஊழியர்களுக்கும். காரில் இருந்த திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளரான ஆர்.கே.அருண்குமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விசிக நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து, அருண்குமார் தனது கடைக்குள் புகுந்துள்ளார். ஆனாலும் விடாத அவர்கள், சலூன் கடைக்குள் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து காரில் தப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சலூன் கடையின் உரிமையாளர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: RED LIGHT AREA போல் மாறிய அடுக்குமாடி குடியிருப்பு.. ரகசிய சோதனையில் பகீர்!
இதன்படி, அருண்குமாரின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு என்னும் கிராமத்தில் மறைந்திருப்பதாக தெரிய வந்து உள்ளது. பின்னர், உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான நாகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாரி மற்றும் மணி ஆகியோரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் தப்பிப்பதற்காக பல்வேறு விதங்களில் உதவிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.