திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு ரூ.5.89 லட்சம் அபராதம் : விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2022, 1:37 pm
பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு 5 லட்சத்து 89 ஆயிரத்து 646 ரூபாய் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
திருவாரூர் மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரி, பாலசுப்பிரமணியன், சுப்புலட்சுமி, செல்வி, கிருத்திகை வாசன் ஆகிய ஐந்து விவசாயிகள் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தங்களுக்கு முறையாக கணக்கிட்டு வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கினை 90 நாட்களுக்குள் விசாரித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைவு ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் ஐந்து விவசாயிகளுக்கும் முறையாக பயிர் காப்பீடு வழங்கப்படாததால் பாக்கி தொகையான 2 லட்சத்து 14 ஆயிரத்து 646 ரூபாயும், அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் சேவை குறைபாடு ஏற்படுத்தியற்காக மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவுத்தொகையாக 50,000 ரூபாயும் மாவட்ட ஆட்சியர் வேளாண் இணை இயக்குனர் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டுக் கழக முதுநிலை மேலாளர் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.