மோடி திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 12:55 pm

மோடி திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

நாகப்பட்டினம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH83) ஒரு பகுதியான நாகப்பட்டினம் தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்து அதற்காக 600 கோடி நிதி ஒதுக்கியது.

ஆனால் அதன் பிறகு ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டு நெடுஞ்சாலை பணி நிறுத்தப்பட்டது.

பிறகு மத்திய பாஜக அரசு நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இரு வழி சாலையாக அமைக்கப்படும் என அறிவித்து அதற்காக 350 கோடி நிதி ஒதுக்கி வேலையை மீண்டும் தொடங்கின.

பின்னர் பல கட்டங்களாக நடைபெற்ற நெடுஞ்சாலை பணிகள் பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் மாறி மாறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தஞ்சாவூர் – நாகப்பட்டினம் இருவழிச்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து அர்ப்பணித்தார்.

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மக்களின் 20 ஆண்டுகால துன்ப நிலை முடிவுக்கு வந்ததாக அப்போது பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த இரு வழி சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த சாலை இன்றுடன் 50வது நாளை எட்டிய நிலையில் இந்த 50 நாட்களுக்குள் பல இடங்களில் சாலைகளில் ஓட்டைகள் விழுந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் முதல் கோவில்வென்னி வரை உள்ள 40 கிலோ மீட்டர் தூரத்தில் 130க்கும் மேற்பட்ட பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர்.

மேலும் திருவாரூர் நகருக்குள் வாகனங்கள் வராமல் செல்ல திட்டமிடப்பட்ட அரை வட்டச் சாலை பணிகள் தற்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதே போல ஆங்காங்கே கழிவறை கட்டும் பணிகளும் நிறைவு பெறாமல் உள்ளன.

மேலும் சாலை ஓரங்களில் தடுப்புகள் முறையாக அமைக்கப்படாமலும், சாலை நடுவே உள்ள தடுப்புகளில் உள்ள மண் சரிவர நிரப்பப்படாமலும் உள்ளது.

சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணிகள் முறையாக அமைக்கப்படாமல் தண்ணீர் வெளியேற வழியின்றி உள்ளது. பல இடங்களிலும் முறையாக ஒளி எதிரொலிப்பான்கள் அமைக்கப்படாததால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதனால் இந்த சாலைகளில் பயணிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நெடுஞ்சாலை பணிகள் முடிவுக்கு வந்து திறக்கப்பட்ட நிலையில் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பல விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும் சாலைகளில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களால் பொது மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை. மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை.

மேலும் பல இடங்களில் எதிரொளிப்பான்கள் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட நெடுஞ்சாலையில் ஒரு கழிவறை கூட இல்லை. மேலும் சாலையோர மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? வெளியான பகீர் தகவல்..!!!

பல்வேறு குறைபாடுகள் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையினை முறையாக சரி செய்யாமல் தேர்தலுக்காக அவசர கதியில் பிரதமர் திறந்து வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 581

    0

    0