டிச.13-க்கு காத்திருக்கிறேன்.. களத்திற்கு வராத விஜய்? – அண்ணாமலை சஸ்பென்ஸ் பதில்கள்!
Author: Hariharasudhan3 December 2024, 6:28 pm
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கில் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைக்காக காத்திருக்கிறேன் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து, கடலூர் மாவட்டம் திடீர்குப்பம் பகுதியிலும் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் உள்ளிட்டவற்றை அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது, அவருடன் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்ற கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து மிக முக்கியமானது. ஜாமீனில் வந்த உடனே எவ்வளவு வேகமாக அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறீர்கள்?
அதுவும் எவ்வளவு முக்கியமான துறையைக் கொடுத்திருக்கிறீர்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் விழாவில் பேசியதை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். என் மகன் உள்பட திமுக அமைச்சரவையில் இருக்கக்கூடிய எல்லா அமைச்சர்களையும் விட செந்தில் பாலாஜி தான் சிறந்தவர் என்கிறார்.
இதை எப்போது ஒரு முதலமைச்சர் சொல்கிறார் என்றால், செந்தில் பாலாஜி ஜாமீனில் இருந்து வெளியே வந்து, இரண்டு வாரத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவரை மேடையிலே வைத்துக்கொண்டே முதலமைச்சர் வாசிக்கக்கூடிய பாராட்டுப் பத்திரம் இது. இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் பார்க்கிறது.
இதையும் படிங்க: களத்திற்குச் செல்லாமல் அளித்த உதவியால் சர்ச்சையில் விஜய்.. நேரில் அழைத்தது ஏன்?
அதைத்தான் நீதிபதிகளும் சொன்னார்கள், இவ்வளவு வேகமாக மாநில அரசு அவருக்கு முக்கியமான பொறுப்பைக் கொடுக்கிறது என்றால், அவர் சாட்சியைக் கலைப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதேநேரம், உச்ச நீதிமன்றம் அவரை எந்த இடத்திலும் நிரபராதி என்று சொல்லவில்லை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நீங்கள் எதற்கு சிறையில் இருக்க வேண்டும் வெளியில் செல்லுங்கள் என்று ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் என்ன கருத்துச் சொன்னாலும், தமிழக மக்கள் இதை உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் அவர்கள் தப்பிக்கலாம். ஆனால், மக்கள் நீதிமன்றத்தில் அவர்கள் தப்பிக்க வேண்டும். அதற்கெல்லாம் மக்கள் நிச்சயமாக 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பதில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.
13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உறுதியான தீர்வைக் கொடுப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. குறிப்பாக, பொறுப்பில் இருக்க வேண்டுமா, துறையில் கையெழுத்து போட வேண்டுமா, நிதி அதிகாரம் இருக்க வேண்டுமா, குற்றம் சாட்டப்பட்டவரின் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரின் மீது, முகாந்திரம் இருக்கக்கூடிய ஒரு வழக்கில், அரசு அதிகாரிகள் போல் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனவே, டிசம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதைக் கேட்பதற்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார். தொடர்ந்து, அவரிடம் புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அரசியல் ஸ்டைல் இருக்கிறது, தனி அணுகுமுறையும் இருக்கிறது. எனவே மற்றொரு அரசியல் கட்சித் தலைவர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.