பதவி உயர்வுக்காக செயற்கை காலி பணியிடங்களை உருவாக்கக் கூடாது : அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை
Author: Babu Lakshmanan5 August 2022, 8:03 pm
சென்னை : பதவி உயர்வுக்காக செயற்கையாகவே காலி பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்று தமிழக தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று அல்லது சில நாட்களுக்கு முன்பாக பதவி உயர்வு கிடைப்பதற்காக செயற்கையாக அந்த அலுவலகங்களில் காலிப்பணியிடம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் அந்த ஊழியருக்கு பதவி உயர்வு வருவதற்கு முன்பே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.
இவ்வாறு ஓய்வு பெறும் சமயத்தில் அவர் பதவி உயர்வு பெற்றால் முழு சேவை செய்யாமலேயே அதற்கான முழு சம்பளம் உள்ளிட்ட பணப்பயனை பெற்று விடுகிறார். இவ்வாறு பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது ஓய்வு பெறும் நாளன்று பதவி உயர்வுக்கான அவரது முறை வருவதற்கு முன்பே பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்த கூடாது.
அதாவது விடுமுறையில் சென்று காலிப்பணியிடத்தை உருவாக்குவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குவது போன்று செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து நியமன அலுவலர்களும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.