கோயம்புத்தூர் – சீரடிக்கு இன்று முதல் தனியார் ரயில் சேவை : டிக்கெட் எவ்வளவு தெரியுமா…?
Author: Babu Lakshmanan14 June 2022, 1:16 pm
கோவையில் இருந்து சீரடிக்கு இன்று முதல் சேவையை தொடங்கும் தனியார் ரயிலை அலங்காரத்துடன் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு ரயில் சேவையும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி தந்துள்ளது. அதனடிப்படையில் கோவை – சீரடி தனியார் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது. வட கோவை ரயில் நிலையத்தில் மாலை ஆறு மணிக்கு பயணிகளுடன் இரயில் புறப்படுகின்றது.
ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்ததன் அடிப்படையில் கோவையிலிருந்தும் இரயில் இயக்கப்படுகின்றன.
முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த நிலையில், ரயிலை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தி வருகின்றனர். முதன் முறையாக தனியார் ரயிலை இயக்குவதனால் அலங்கார பணிகளும் நடந்துவருகின்றன.
ரயில் மஞ்சள், நீலம் நிறங்களில் வண்ணம் பூசியிருக்கின்றனர். இரயில் பெட்டியின் உட்பகுதியில் பேப்பர்கள் ஒட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுவருகின்றன. தனியாரின் கீழ் சீரடிக்கு முதல் சேவை இன்று ஆர்ம்பவாதனால் ரயில் புது பொழிவுடன் அலங்கரித்து வருகின்றனர்.
கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு வழக்கமாக ஸ்லீப்பர் கட்டணம் 1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 2,360 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.
குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய். ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 8,190 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு ரயில் இயங்குகிறது. அதிக கட்டண நிர்ணயம் எளியோருக்கு ரயில் சேவை எட்டாக் கனியாக மாறியிருக்கின்றது.