திராவிட மாடலும், காமராஜர் ஆட்சியும் ஒன்னா? தமிழக தலைமையை மாற்ற டெல்லியில் முகாம்!
Author: Hariharasudhan20 February 2025, 11:13 am
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி, மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தற்போது செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இவரை பதவியில் இருந்து மாற்றக் கோரி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் புகார் மனு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோட்டங்கரை டெல்லியில் சந்தித்த மாவட்டத் தலைவர்கள், நேற்று (பிப்.19) இரவு புகார் மனு கொடுத்ததாகவும், இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பில், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட 25 மாவட்டத் தலைவர்கள் மற்றும் இரண்டு எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் புகார் மனுவில், “செல்வப்பெருந்தகை மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. மாவட்டத் தலைவர்களை மாநில நிர்வாகிகள் மதிப்பதில்லை. கட்சிக்காக உழைக்கும் மாவட்டத் தலைவர்களை மாற்றும் வகையில் புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தைகையை மாற்றக் கோருவது ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது, காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இணையவழிக் கூட்டத்துக்கு அவர் அழைத்தால், அதை மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
ஏன், சமீபத்தில்கூட சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக மேலிடப் பொறுப்பாளராக இருந்த அஜோய்குமாரிடம், செல்வப்பெருந்தகையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசியுள்ள மாவட்டத் தலைவர்கள், “மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோருடன் செல்வப்பெருந்தகை இணக்கமாக இல்லை. திராவிட மாடல் ஆட்சியும், காமராஜர் ஆட்சியும் ஒன்று என திமுக அரசுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார்.
இதையும் படிங்க: ’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!
இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ள நிலையில், கிராம கமிட்டி, நகர கமிட்டி, வட்டார கமிட்டி என செல்வப்பெருந்தகை நிர்வாகிகளை நியமித்து வருகிறார். கட்சித் தலைமை அனுமதியின்றி, இவரது படம் இடம் பெற்ற அடையாள அட்டையை மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகிறார்.
இவரே மாநிலத் தலைவராக நீடித்தால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். எனவே, செல்வப்பெருந்தைகையை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிஷ் சோட்டங்கர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.