குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு ‘செக்’ : ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
Author: Babu Lakshmanan25 June 2022, 4:08 pm
காஞ்சிபுரம் : குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது.
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில் அதன் நிறுவனத்தால் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அனாதீனம் வகைப்பாட்டு புறம்போக்கு அரசு நிலம், சுமார் 32 ஏக்கர் 41 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நில நிர்வாக ஆணையம் உத்தரவின்பேரில் இன்று 200 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான நிலத்தை திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டாச்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய்துறையினர் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மீட்டனர்.
குறிப்பாக, பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பகுதியான ரோப்கார், நீச்சல் குளம், உணவகம் ஆகியவை அரசு நிலத்தில் இருந்ததால் அவற்றை மூடி சீல் வைத்தனர். மேலும், பொழுதுபோக்கு பூங்காவுக்கு சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றப்பட்டு அரசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.