ரஜினியை அரசியலில் இறக்க முடியாததால் விஜயை பாஜக களமிறக்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், திமுக எதிர்ப்பை விஜய் பதிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளனர். அந்த வரிசையில் அவரும் கட்சி தொடங்கி உள்ளார். எனவே, அவருக்கு வாழ்த்துக்கள்.
புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. விஜய், தான் ஏ டீம், பி டீம் இல்லை எனச் சொல்வதை வைத்து பார்க்கும் போது தான் சந்தேகமே ஏற்படுகிறது.
திமுகவை பணம் சம்பாதிப்பதாகக் கூறி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்திருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என்று விஜயின் தந்தையே சொல்லி உள்ளார். எனவே, ஒரு கிரிமனலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார் என்று தெரியவில்லை.
ஒருவேளை கிரிமினல் இப்போது நல்லவராக மாறிவிட்டாரா என்னவோ? விஜய் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியைப் போல் வருமான வரித்துறை காரில் அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது.
குற்றம் இருப்பதால் மட்டுமே அவரிடம் விசாரணை நடத்தினர். எனவே, ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தார்கள். அவர் வரவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக விஜயை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: புகைகிறதா திமுக – சிபிஐஎம் கூட்டணி.. மீண்டும் சீண்டிய சு.வெ
திமுக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 75 ஆயிரம் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே, இந்த அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்கக்கூடிய அரசாக, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.