விடுமுறை கேட்டு விண்ணப்பித்த மின்வாரிய ஊழியர்.. காரணத்தை கேட்டு ஆடிப்போன உயரதிகாரிகள்.. வைரலாகும் கடிதம்..!!
Author: Babu Lakshmanan29 March 2023, 4:35 pm
புதுக்கோட்டையில் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். இவர் நேற்று தன்னுடைய மேல் அதிகாரியிடம் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். அந்த கடிதத்தை வாங்கி பார்த்த மின்வாரிய அதிகாரி அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில், ரகுநாதன் எழுதியதாவது, வாரியாத்தாலும் தொழிற்சங்க அமைப்புகளாலும் தான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக மன அமைதியை எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்வதற்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும், என்று அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த கடிதத்தை பார்த்த மின்வாரிய அதிகாரி, இதுபோன்று விடுப்பு கொடுப்பதற்கு வாரிய சட்டத்தில் இடமில்லை என்று கூறி அவருக்கு விடுப்பு கொடுக்க மறுத்த கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக மின்வாரிய ஊழியர் ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.