கரெக்ட் டைமுக்கு வந்தும் உள்ள விடல… கதறி அழுத பெண்.. சாலையில் அமர்ந்து TNPSC தேர்வர்கள் தர்ணா..!!
Author: Babu Lakshmanan10 September 2022, 1:45 pm
கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 7 பி போட்டித் தேர்வுகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் நடைபெறுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தேர்வுகள் காலையில் துவங்கி நடைபெற்றது.

இன்று காலையில் வழக்கம் போல் போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அனுமதித்தனர். அதன் பிறகு வந்தவர்களை அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த தேர்வு மையத்தில் 240 பேர் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காலை 9 மணிக்குள் 117 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். அதன் பிறகு வந்த 10 பேர் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் அனுமதிக்கும் நேரம் முடிந்து விட்டதால் அனுமதிக்க இயலாது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நாங்கள் 8.45 மணிக்கே வந்து விட்டோம் எங்களை அனுமதிக்க மறுக்குறீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கரூர் – நாமக்கல் சாலையில் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கரூர் மாநகர போலீசார் தேர்வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுத வந்தவர்களில் பெண் ஒருவர், உரிய நேரத்திற்கு வந்தும்.. தனது கனவு சிதைக்கப்பட்டு விட்டதாகக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை உலுக்கியது.