டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்.. அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த ட்விஸ்ட் : தேதியுடன் வெளியான அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2023, 4:57 pm
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்.. அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த ட்விஸ்ட் : தேதியுடன் வெளியான அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தில் தலைவர் உள்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்று வெறும் 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
மீதி பத்து இடங்கள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பொறுப்பை வகிக்க கூடியவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இது மட்டுமல்லாமல், பணியாளர் பற்றாக்குறையும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, 2021 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோல் குரூப் 2 பிரதான போட்டித் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததற்கும் ஆட்கள் பற்றாக்குறையே காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதமே வெளியிடப்பட வேண்டிய இந்த ஆண்டிற்கான குரூப் 4 அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.. இதனிடேய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் பேட்டி அளித்த போது, தேர்வு எழுதியவர்களின் மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும். டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல், டிசம்பர் மாதம் ஆரம்பித்து 2-வது வாரத்தையும் கடந்த நிலையில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கையில், தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்’ என்று கூறினார். மேலும், தேர்வு முடிவு தாமதத்துக்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் என்று கூறினார்.