ரூ.1.50 லட்சத்துக்கு வட்டி ரூ.8 லட்சம்: கந்து வட்டியின் பிடியில் சிக்கிய நடுத்தர குடும்பம்…நீதி கேட்டு தூக்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு!!
Author: Rajesh7 March 2022, 2:09 pm
கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி அதற்காக மாதம் ரூ.1500 வட்டி கட்டி வந்தேன். இதுவரை ரூ.85 ஆயிரம் செலுத்தி உள்ளேன். தற்போது அந்த பத்திரத்திற்கு அவர் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளக் கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் எங்களது குடும்பத்தை திட்டி விரட்டிவிட்டார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை மனு அளித்துள்ளோம். இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.