பேரறிவாளன் விடுதலை: பட்டாசு வெடித்து கொண்டாடிய தபெதிகவினர்..!!

Author: Rajesh
18 May 2022, 12:24 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார்.

தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.


இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் இன்று வழங்கினர். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை விவகாரத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதன் காரணமாக ஜாமீனில் உள்ள அவரை தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்து நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான, போபண்ணா, கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில்,

”பேரறிவாளனை தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். செங்கொடி உயிர் தியாகம் செய்தார். இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


பேரறிவாளன் விடுதலைக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசும், மாநில ஆளுநரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் பேரறிவாளன் மட்டும் விடுதலை ஆகவில்லை. மாநில உரிமைகளும் விடுதலை பெற்றுள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கொட்டு வைத்துள்ளது. இத்தீர்ப்பினால் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 880

    0

    0