திருமணமாகி 2 வருடங்களில் சோகம்.. மனைவியை கொன்று புதைத்த கணவன் : மரத்தில் தொங்கிய சடலம்!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2024, 4:44 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.அலம்பலம் கிராம ஏரிக்கரையில் மண் அள்ளும் இயந்திரமான ஹிட்டாச்சி ஓட்டுநர், தனது மனைவியை கொன்று புதைத்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், லட்சுமனாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும், அதே பகுதியில் உள்ள மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த சுவேதா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், ஹிட்டாச்சி ஓட்டுனரான சக்திவேல், தான் வேலைக்கு செல்கிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியை உடன் அழைத்துச் சென்று, அங்கேயே தங்கி விடுவாராம்.
கடந்த சில நாட்களாக சின்னசேலம் வட்டம் வி.அலம்பலம் கிராம ஏரியில் மண் அள்ளும் இயந்திரம் வைத்து, வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல், அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தனது மனைவியுடன் தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை வி.அலம்பலம் ஏரியில் தனது மனைவி சுவேதாவை கொன்று புதைத்து விட்டு, அவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த காட்சியைக் கண்டு, அப்பகுதி மக்கள் கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடல்களையும் கைப்பற்றினர். சுவேதாவின் உடலை தோண்டி எடுக்க தாமதமான நிலையில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ், சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், காவல் நிலைய ஆய்வாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: EVMல் மோசடி செய்ததால் தான் ஜெகன் தோல்வி.. விசாரித்து ஆக்ஷன் எடுங்க.. குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!
இருவரது உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சக்திவேலின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.