9 உயிர்களை பலிகொண்ட ரயில்பெட்டி தீவிபத்து ; வெளியான முக்கிய அறிவிப்பு… நாளை பொது விசாரணை நடத்த முடிவு..!!!
Author: Babu Lakshmanan26 August 2023, 6:53 pm
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை மதுரையில் பொது விசாரணை நடத்த உள்ளார்.
மதுரை ரயில் நிலைய போடி ரயில் பாதை அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி நாளை மதுரையில் பொது விசாரணை நடத்த இருக்கிறார்.

இந்த விசாரணை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நாளை காலை 09.30 மணிக்கு துவங்கி நடைபெறும். இந்த விசாரணையில் விபத்து பற்றி அறிந்த தெரிந்த பொது மக்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொது விசாரணையில் ஆணையரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
மேலும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தென்சரகம், ரயில் சன்ரக்ஷா பவன், (இரண்டாவது மாடி) பெங்களூரு – 560023 என்ற முகவரிக்கும் அனுப்பலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.