ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலி ; காரணமான ரயில்வே அதிகாரிகள்… பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!
Author: Babu Lakshmanan20 November 2023, 9:20 am
திருவள்ளூர் அருகே ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வேப்பம்பட்டு பகுதியில் இருந்து திருமழிசை பூந்தமல்லி புதுச்சத்திரம் வழியாக சென்னை செல்வதற்கு பிரதான வழியாக பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே, ரயில்வே இருப்பு பாதையை கடப்பதற்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு சுமார் 30 கோடி அளவில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு 41% முடிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வரை பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளதால், ரயில்வே இருப்பு பாதையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று வேப்பம்பட்டு இருப்பு பாதையை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்னை – திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரயில்வே மேம்பால பணிகளை உடனே முடிக்க வேண்டும் எனவும், இதுவரை இழந்த உயிர்கள் போதும் இனிமேல் எந்த உயிரிழப்பும் மேம்பால பணியின் காரணமாக போகக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.