வேலூர் மாநகராட்சி தேர்தல் : திமுக சார்பில் திருநங்கை வேட்புமனு தாக்கல்
Author: kavin kumar2 February 2022, 7:20 pm
வேலூர் : திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா, வேலூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சுதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார்.
அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் 37 வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா, தேர்தல் நடத்தும் அலுவலர் வேலூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சுதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் 38 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஜோதிலட்சுமி, 47 வது வார்டுக்கு பாமக வேட்பாளர் தாமு, 39வார்டுக்கு பாமக வேட்பாளர் பாலாஜி ,உள்பட பலர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக சார்பில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா அறிவிக்கப்பட்டு இன்று அவர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.வேலூர் மாநகராட்சி முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.