‘திருநங்கை-னு சொல்லி மகளிர் உரிமைத் தொகை தர மாட்டீறாங்க’ ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் வேதனை..!!
Author: Babu Lakshmanan25 September 2023, 5:01 pm
திருநங்கைகள் என்பதால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக கரூரைச் சேர்ந்த திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடனும் மற்றும் சிலர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் கரூர் மாநகரப் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
மேலும், தமிழக அரசிடம் இருந்து தங்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். குடியிருக்க தனியாக இடம் ஒதுக்கி, வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரூர் கோட்டாட்சியர் ரூபினாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு முறையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது:- தங்களுக்கு தமிழக அரசின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த தங்களுக்கு, திருநங்கைகள் என்ற ஒரே காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், குடும்ப அட்டை வைத்துள்ள தங்களுக்கு உரிய உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
0
0