மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை : அடுத்தடுத்து புகாரில் சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 5:43 pm
குன்னத்தூரில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த
தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செங்கப்பள்ளி ரோட்டில் சுமதி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு போன்றவை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
மேலும் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவம் பார்க்கப் பட்ட பெண் ஒருவர் இறந்ததாகவும் புகார் வந்தது. இதன் பேரில் அதிகாரிகள் சுமதி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல், மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனிடம் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் சுமதி மருத்துவமனையில் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மீண்டும் மகப்பேறு டாக்டர் நியமிக்கப்படாமல், டாக்டர் விஸ்வநாதன் மகப்பேறு சிகிச்சைகள் மற்றும் கருக்கலைப்பு மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இயங்கி வந்த பிரசவ பகுதி மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
விஸ்வநாதனின் மருத்துவ கல்வி தகுதிக்கு ஏற்ப அவர் பொது சிகிச்சை மட்டும் அளிக்க அறிவிக்கப்பட்டது. மேலும் இனி வருகிற காலத்தில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் நியமித்து அவர்கள் தொடர்பான சிகிச்சைகள் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சுமதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.