ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை… சிக்கிய தனியார் மருத்துவமனை : போலீஸ் குவிந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 9:39 pm

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியசாமி தனது மனைவி ராதாவோடு வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ராதாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பின் உறவினர்கள் வார்டில் சென்று பார்த்த போது உடல் அசைவில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அங்குள்ள நர்சிடம் கேட்ட போது மயக்க நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்பு ராதாவின் உடலை பெற்று கொண்டனர்.

உயிரிழந்த ராதாவின் உறவினர்கள் கூறுகையில், காலையில் ஐசியு வார்டில் பார்த்த போது உடல் குளிந்த நிலையில் இருந்தது மூக்கில் ரத்தம் வழிந்தது. இது பற்றி கேட்டதற்கு மயக்க நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

காலையிலேயே இறந்து விட்டார். அதை தெரிவிக்காமல் மாலை வரை வைத்துள்ளனர். டாக்டரிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜோசப்ராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர், ராதா காலை மருத்துவமனைக்கு வரும் போது உடல் நிலை மோசமாக இருந்தது. அது குறித்து உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்து இறந்தவரின் உறவினர்கள் கூறும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார்.

நகரில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் இறந்ததை அறிவிக்காமல் ரமணா பட பாணியில் சிகிச்சை அளித்துள்ளதாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டது தனியார் மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!