மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பலி… நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி ; குழந்தைகளுடன் கதறும் நபர்..!

Author: Babu Lakshmanan
31 July 2023, 10:03 pm

தோட்டப்பணி செய்து கொண்டிருந்த பொழுது மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தோட்ட உரிமையாளர் இழப்பீடு தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பெரியூர் ஊராட்சி சேம்படி ஊத்து பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆதிவாசி பழங்குடியின புலையர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அடர்ந்த மலை பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்கள் கடந்த காலங்களில் தேன் மற்றும் கிழங்கு சேகரித்து வந்த நிலையில், தற்போது விவசாய கூலி பணிகள் செய்து வருவதாகவும், நிரந்தரமாக எந்த பணியும் இல்லை கிடைக்கும் விவசாய கூலி வேலைகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், பெரியூர் ஊராட்சி பகுதியில் குடியிருக்கும் திண்டுக்கல் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் பாலனுக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு முத்துப்பாண்டியன் மனைவி மஞ்சுளா கூலி வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென தோட்டத்தில் இருந்த மரம் மஞ்சுளா மீது விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை உடன் பணி செய்த பணியாளர்கள் கே சி பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மஞ்சுளா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த தாண்டிக்குடி காவல்துறையினர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பின்பு, பிரேத பரிசோதனை செய்யப் போகிறீர்களா..? பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா என்றெல்லாம் கேட்டுள்ளனர். அதற்கு பழங்குடியின மக்கள் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு வழக்கு பதிவு மட்டும் செய்வதாக கூறி காவல்துறையினர் சென்று விட்டனர்.

மேலும் கணேசன் மற்றும் பாலன் ஆகிய இருவரும் அங்கு வந்து பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மஞ்சுளாவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள். வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம். குழந்தைகளுக்கு தேவையான படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். மேலும், இழப்பீடு தொகை தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய பழங்குடியின மக்கள் மஞ்சுளாவின் உடலை அவர்கள் வசித்து வரும் சேம்படி ஊத்து பகுதியில் இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

இறுதிச்சடங்கு செய்யும் வரை தோட்டத்தில் உரிமையாளரான திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் பாலன் உடன் இருந்துள்ளனர். இறுதிச் சடங்கு முடித்துவிட்டு சென்றவர்கள், தற்போது வரை பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இதில் அனைத்து உதவிகளும் செய்கிறோம் என்று எங்களது மக்களிடம் பேசிப் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதிச்சடங்கு முடியும் வரை இருந்த எங்களது பகுதி அருகில் உள்ள பெரியூர் ஊராட்சியில் குடியிருக்கும் திண்டுக்கல் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கணேசன் மற்றும் பாலன் எங்களை ஏமாற்றி விட்டார்கள். தொடர்ந்து நாங்கள் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டாலும் உடனடியாக செய்து விடுகிறோம் என்று கூறுகின்றனர். தற்போது எட்டு மாதங்கள் ஆகிறது எனது மனைவி 12.10.2022 அன்று இறந்தார். தற்போது வரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

மேலும், நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது பிள்ளைகளையும் தற்போது வரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. தாண்டிக்குடி காவல்துறையும் வழக்கு பதிவு செய்யவில்லை. அப்போது இருந்த சூழ்நிலையில் நாங்கள் தகவல் மட்டும் சொல்லிவிட்டு இருந்து விட்டோம். ஆனால், தற்போது வரை காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. தோட்ட உரிமையாளர்களும், எந்த ஒரு இழப்பீடும் வழங்கவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தோட்ட உரிமையாளர்களிடம் இழப்பீடை வாங்கித் தர வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 276

    0

    1