விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா… பழங்குடியின மக்களின் செயலால் கோவை போலீசார் அதிர்ச்சி ; 4 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 8:34 am

கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தநமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிந்தது.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தபோது கஞ்சா செடிகளை பயிரிட்டது பசுமணி கிராமத்தில் வசிக்கும் செல்லன்(60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது.

இந்நிலையில், 4 நபர்களையும் கைது செய்த போலீசார் அங்கு பயிரிடப்பட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு, அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 505

    0

    0