’நீ வந்து ப** பிரச்னை முடிஞ்சிடும்’.. பழங்குடியினப் பெண்ணுக்கு திமுக கவுன்சிலர் ஆபாச மிரட்டல்? மதுரையில் திடுக்!
Author: Hariharasudhan10 December 2024, 1:31 pm
மதுரையில், பழங்குடியினப் பெண்ணுக்கு திமுக கவுன்சிலர் ஆபாச மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை: மதுரை, மீனாட்சி தெருவில் பழங்குடியின தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது வீட்டின் அருகில் போட்டிருக்கும் தண்ணீர் குழாய் தொட்டியை மூட வேண்டும் என்று திமுக கவுன்சிலர் மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இது தொடர்பாக ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் 6 தலைமுறைகளாக இதே பகுதியில் இருக்கிறோம். எனது மாமனாரின் தாத்தா அளித்த இடம், அதாவது எங்களது பூர்வீக இடத்தில் கோயில் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள எங்களது வீட்டின் முன் தண்ணீர் குழாய் தொட்டி அமைத்து, அதனை பாதுகாப்பான முறையில் பராமரித்து வருகிறோம்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் 67வது வார்டு கவுன்சிலர் (திமுக) நாகநாதன் என்பவர், இந்த தண்ணீர் குழாயை மூட வேண்டும் என தொடர்ந்து மிரட்டுகிறார். இது தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூன்று பேர் வந்து சொல்லிவிட்டுச் செல்வர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த கவுன்சிலர் உள்பட 3 பேர் மீண்டும் வந்தனர்.
அப்போது, எனது கணவர் எங்கே என்று தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர், காட்டுக்குள் இருக்க வேண்டிய நீங்கள் ஊருக்குள் இருக்கக்கூடாது, உங்களை எப்படியாவது இங்கு இருந்து துரத்தி விடுவேன் என மிரட்டினார். இந்த தண்ணீர் தொட்டியால் உங்களுக்கு என்ன பிரச்னை, என்ன செய்தால் பிரச்னை செய்யாமல் இருப்பீர்கள் எனக் கேட்டேன்.
இதையும் படிங்க: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. சங்கரன்கோவிலில் பரபரப்பு!
அதற்கு, என்னோடு வா, என் கூட ஒருமுறை படு, அப்படி நீ செய்தால் உடனடியாக பிரச்னை தீர்ந்துவிடும் என ஆபாசமாக மிரட்டி விட்டு, நாளை காலை வருவேன், உன் முடிவைச் சொல்லு எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், எதற்காக இப்படிச் செய்கிறார் என்பது இதுவரை எங்களுக்கும் தெரியவில்லை, தினமும் வருகிற 3 பேருக்கும் தெரியவில்லை.
இதுவரை இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் மூலம் ஆன்லைனில் புகார் அளித்து இருக்கிறோம். இதுநாள் வரை எங்களை காவல் நிலையத்தில் இருந்து அழைக்கவில்லை” எனத் தெரிவித்தார். பின்னர், இது குறித்து வார்டு கவுன்சிலர் ஊடகத்திடம் பேசியுள்ளார்.
அப்போது அவர், “நீங்கள் சொல்லும் நபர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்தப் பகுதியில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவ்வாறு நான் நடந்து கொண்டதற்கான ஆடியோ, வீடியோக்களைக் கொடுங்கள், முதலில் அவர்களை அந்த வேலையை முடித்துக் கொடுக்கச் சொல்லுங்கள், நான் AE-யிடம் பேசுகிறேன்” என்றார். இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.