அமேசான் டெலிவரி மையத்தில் ரூ.2.30 லட்சம் திருட்டு… பூட்டை உடைத்து திருடிய நபர் கைது.. பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 10:22 am

திருச்சி அருகே அமேசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் அமேசான் நிறுவனத்தின் பொருட்கள் டெலிவரி செய்யும் கிளை நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றனர். காலையில் கடை திறந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடையின் மேலாளர் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் கிளை மேலாளர் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் விதுன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், முசிறி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அமேசான் டெலிவரி செய்யும் கடையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் அவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் முசிறி சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் குமார்(21) என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட குமாரிடம் இருந்து ரூபாய் 80ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. வாலிபர் குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகமூடி அணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் பிடிபட்ட சம்பவம் முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?