தமிழகத்தின் மிகத் தூய்மையான நகரம் ‘திருச்சி’… டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவிப்பு!!
Author: Babu Lakshmanan12 January 2024, 11:44 am
திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்ததற்கான சான்றிதழை மேயர், ஆணையர் பெற்றுக்கொண்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மைக்கான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மை நகரங்களில் மேயர் மற்றும் ஆணையரை அழைத்து பரிசுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் பட்டியலை வெளியிட்டது. அதில், தேசிய அளவில் திருச்சி 112வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தது.
திருச்சி மாநகராட்சி தூய்மை நகரத்தின் முதலிடம் பிடித்தாதாக தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான சான்றிதழை மாநகராட்சியில் மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல, தேசிய அளவில் தூத்துக்குடி 179வது இடத்தையும், கோவை 182வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளன.