கலெக்டர் ஆபிஸில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி.. தொடர்ந்து மோதல் போக்கால் விரக்தி… திருச்சியில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
10 April 2023, 2:36 pm

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரான குருசாமி என்பவர் மகன் மூர்த்தி (64). இவர் பி.எஸ் சி பட்டதாரி. இவர் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அப்பகுதியில் பணியாற்றும் நகராட்சி ஊழியர் ஒருவர், இவரை திமுக பிச்சைக்காரன் என கேலி கிண்டல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும், மழை விட்டும் தூவானம் விடாத கதையாக இப்பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.

மேலும், மாநகராட்சி ஊழியர் இரண்டு பிச்சைக்காரர்களை வைத்து இவரை அடித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் 110 ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் நகராட்சி ஊழியரிடம் மன்னிப்பு கடிதம் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், இப்பிரச்சினை முடியாமல் தொடர்ந்து வந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்தி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டீசலை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து மீட்டதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் கடும் சோதனைக்கு பிறகே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில், இதுபோன்ற எரிபொருளை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், சிறிது நேரம் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 393

    0

    0