தீர்ப்பை கேட்டு கதறி அழுத போக்சோ குற்றவாளிகள்… திடீரென நீதிமன்ற மாடியில் இருந்து குதித்ததால் அதிர்ச்சி.. திருச்சியில் பரபரப்பு
Author: Babu Lakshmanan12 January 2024, 9:58 am
திருச்சியில் போக்ஸோ வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பை கேட்டு நீதிமன்ற 2வது மாடியில் இருந்து குதித்த குற்றவாளிகளால் பரபரப்பு நிலவியது.
திருச்சி திருவானைக்கா பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (22). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (23), திருப்பதி (24). கடந்த 16.8.2020ம் ஆண்டு சிறுமியிடம் பாடப்புத்தகத்தை எடுத்துவரச் சொல்லியுள்ளார் பசுபதி. சிறுமி புத்தகத்தை எடுத்துக்கொண்டு பசுபதி வீட்டுக்குச் சென்றதும் மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குற்றம் உறுதி செய்ததையடுத்து மூவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ,15ஆயிரமும், கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பை வாசித்ததும் நீதிமன்ற அறைக்குள்ளேயே 3 பேரும் கதறி அழுதனர். இதில் பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் திடீரென நீதிமன்றத்தின் 2வது மாடியிலிருந்து யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குற்றவாளிகளின் இந்த தற்கொலை சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0
0