‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள், என்னை மன்னித்துவிடு’; கணவருடன் வீடியோ கால் பேசிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 12:43 pm

திருவெறும்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து திருவெறும்பூர் நகர திராவிடர் கழக தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி காலை கூட்ஸ் ரயில் சென்றது. திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்த பொழுது ரயில் முன் வாலிபர் ஒருவர், ரயில்வே பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வதற்காக படுத்து உள்ளார். கூட்ஸ் ரயில் டிரைவர் எவ்வளவோ எச்சரித்தும் சத்தமிட்டும் கேட்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், ரயிலை நிறுத்த முடியாமல் அந்த வாலிபரின் மீது கூட்ஸ் ரயில் ஏறி 20 மீட்டர் தூரம் தள்ளி போய் நின்றது. சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உடனடியாக பொன்மலை ரயில்வே போலீசருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்தது தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை செய்தனர்.

இறந்தவர் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசித்து வந்த பச்சையப்பன் என்பவரின் மகன் சுரேஷ் (40) என்பதும், இவர் திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவராக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், இறந்து போன சுரேஷுக்கு சாந்தி என்ற மனைவியும், மகன்கள் அன்புச்செல்வன்(13) இவன் ஒன்பதாவது வகுப்பும், அறிவுச்செல்வன்(15) 11-வது வகுப்பும் பாய்லர் பிளாண்ட் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் பெல் நிறுவன கணேசா பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தியுள்ளார். சமீபகாலமாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில், “குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள், என்னை மன்னித்துவிடு’ என்று மனைவிக்கு வீடியோ காலில் பேசி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுரேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வந்து காத்திருந்து உள்ளார். அப்பொழுது, ரயில் வருவது தெரிந்ததும், தனது பர்ஸ், செல்போன், வாட்ச், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அமர்ந்திருந்த அந்த பெஞ்சில் வைத்துவிட்டு சென்று தான், கூட்ஸ் ரயில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், சுரேஷ் தற்கொலைக்கு கடன் பிரச்சினைதான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேஷ் பேசிய வீடியோ காலை பார்த்துவிட்டு சாந்தி தனது உறவினர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான், உறவினர்கள் சுரேஷை தேடிக் கொண்டு வந்த போதுதான், சுரேஷ் திருவெறும்பூர் அருகே குமரேசபுரம் பகுதியில் ரயில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பொன்மலை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 899

    0

    0