அலைமோதிய மக்கள் கூட்டத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… பிரபல ரவுடி பலி ; வெளியானது சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan3 October 2022, 7:48 pm
திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பிரபல ரவுடி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் துணி,நகை உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமும், மேலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரபல துணிக்கடை எதிரில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு, நாலு பக்கமும் சிதறி ஓடினர். அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரியின் பலூனுக்கு நிரப்பப்பட்ட ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. இதில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் பலியான நபர் கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம், கரட்டான் காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரவுடி ரவிக்குமார் எனற மாட்டு ரவி (35) என என தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது காவல்துறை தெரிவிக்கின்றனர்.
மேலும், கேஸ் பலூன் விற்ற நபர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய பலூன் விற்ற நபரை
காவல்துறையினை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சியை காவல் துறை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று உத்திரதேசம் மாநிலத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங்கை காவல்துறையினர் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனார்சிங்குக்கு மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும், மூன்று வயதில் பெண் மற்றும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பை தேடி உத்திரப் பிரதேசம் நக்லாவ் மாவட்டத்தில் இருந்து தமிழகம் வந்தவர்.
இவருடன் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திருச்சியில் உள்ள நபர்ஷா பள்ளிவாசல் அருகில் தங்கிக் பஞ்சுமிட்டாய், பலூன், பான் பூரி உள்ளிட்டவைகள் வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.