பாஜக பெரிசா ஜொலிக்கல… ஜுன் 4க்காக இப்பவே தயார் பண்ணீட்டாங்க ; துரை வைகோ!!
Author: Babu Lakshmanan20 ஏப்ரல் 2024, 4:35 மணி
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நாங்கள் கூறி வருவதாக திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரைவைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :- 18வது மக்களவைத் தேர்தல் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்க போகிறது. மக்கள் நல அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் நாங்கள் ஆதரவளிக்கின்றோம். அதே வேளையில் மதவாத பாசிச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக திகழும் தளபதி அவர்களை, இன்று காலை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தது மட்டுமல்லாமல் வாழ்த்தும் பெற்றேன்.
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம் தளபதி அவர்களின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் குறிப்பிடும்பொழுது, மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பை அது பெற்றிருக்கிறது என்பதை நாங்கள் அந்த 25 நாட்களில் தெரிந்து கொண்டோம்.
ஜனநாயகத்திற்காக மக்கள் நலன் அரசியலுக்காக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. சென்ற இடமெல்லாம் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து மிகச் சிறப்பான வரவேற்பை பொதுமக்கள் அளித்தனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மட்டுமில்லாமல் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் உற்சாக வரவேற்பை மக்கள அளித்தனர்.
திருச்சியை பொறுத்தவரை அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், வைகோ அவர்களின் சார்பிலும், மதிமுக சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்தேன்.
இந்த தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். வாக்கு செலுத்த வந்தவர்களின் முகத்தை பார்க்கும் பொழுது, முகமலர்ச்சியோடு முழு மனதோடு எங்கள் ஆதரவு மக்கள் நலன் அரசியலுக்கு, ஜனநாயகத்திற்கு என்று சொல்லும் விதத்தில் இருந்தது. ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அது ஊட்டியுள்ளது. ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101ஆவது பிறந்தநாள் பரிசாக நம்முடைய தளபதி அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் இருக்கும்.
தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் மூன்றாம் ஆண்டு சாதனைகளை சொல்லும் பொழுது மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் இலவச பேருந்து, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் இதுபோன்ற திட்டங்களை தேர்தல் பரப்புரையில் சொல்லும் பொழுது, தாய்மார்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருந்தது. அது தான் எங்களுக்கு நம்பிக்கையாக இருந்தது.
100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சொல்லும்போது தாய்மார்களிடம் கோபம் இருந்தது. 100 நாள் வேலை திட்டத்தை குறைத்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை கிராமப்புறங்களில் சொல்லும் பொழுது மக்களிடம் கோபம் இருந்தது.
திமுகவினர் எனக்காக களத்தில் வந்து பணியாற்றினார்கள். அதில் எந்த குறையும் வைக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும். இந்த தேர்தலில் பெரிய அளவில் பாஜக ஜொலிக்கவில்லை. ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக வாக்காளர் பட்டியல் போன்ற விஷயங்களை பாஜகவினர் தயார் செய்து வைத்துள்ளனர், என்றார்.
0
0