திமுகவை நம்பி செல்வது தற்கொலைக்கு சமம்.. ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டோம் என மக்கள் நினைக்கின்றனர் : எஸ்பி வேலுமணி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 4:37 pm

உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஜனவரி 3, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பான ஆலோசணைக் கூட்டம் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, ஒன்றரை ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை.

ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என்றாரோ, அதைத்தான் செய்வார்.
கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை மூடினார். கொரோனா காலத்தில் ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தார்.

எனது மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலின் சொன்னார். படிப்படியாக கொண்டு வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகள் இருந்ததால், அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் காங்கிரசை விட திமுக மோசமாக உள்ளது. திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள்.

கருணாநிதி கூட ஸ்டாலினுக்கு இறுதிவரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார்.உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமாக பதவி கொடுக்கிறார்கள். ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். ஆனால் வைகோ தற்போது எதுவும் பேசவில்லை.

திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை. திமுக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ததே திமுக சாதனை. ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர்.

ஊடகங்கள் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த வரலாறை போடுவதை நியாயமா? ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி போய்விடும். எதுவும் செய்யாத ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக.

திமுகவின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே. அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களில் பாதி கூட, திமுக ஆட்சியில் நடப்பதில்லை.

எந்த கொம்பனும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக இருக்க முடியாது.

திமுக ஐடி விங்க் அதிமுக தலைவர்களை, எம்.எல்.ஏ.க்களை டேமேஜ் செய்கிறார்கள். சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராமன் திமுகவிற்கு செல்வதாக திமுக ஐடி விங்க் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த கட்சியில் இருந்து அனுபவித்து விட்டு சென்றால், அதிமுக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களின் பாவம் சும்மா விடாது. திமுகவை நம்பி செல்வது தற்கொலை செய்து கொள்வது போல தான் எனத் தெரிவித்தார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!