யூகத்தை யாரும் நம்பாதீங்க… தலைவர் அன்னைக்கே சொல்லீட்டாரு… தொண்டர்களுக்கு த.வெ.க. தலைமை சொன்ன தகவல்…!!!
Author: Babu Lakshmanan23 February 2024, 9:48 pm
யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி படிவம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இது போலியானது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.