அதிமுக உடன் கூட்டணியா? தவெக மறுப்பு.. அப்போ அடுத்தது என்ன?

Author: Hariharasudhan
18 November 2024, 12:50 pm

அதிமுக உடன் கூட்டணி என்பது ஆதாரமற்ற தகவல் என விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் தலைவர் (விஜய்) தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

தலைவர் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்று தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாக சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில், பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

VIJAY WITH TVK FLAG

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜயின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை அரசியல் எதிரி எனக் கூறினாலும், அதிமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேநேரம், கூத்தாடிகள் நாடாளலாமா என்ற பதத்தில் பேசும்போது எம்.ஜிஆரைக் குறிப்பிட்டார் விஜய்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!

அதேநேரம், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர்கள், அதிமுக ஆட்சியில் ஊழல் இல்லை, அதிமுக ஆட்சி நன்றாக இருந்தது, அதனால் விஜய் விமர்சிக்கவில்லை என்றும், எம்.ஜி.ஆர் இன்றைய அரசியலுக்கும் தேவைப்படுகிறார் எனவும் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அதிமுக உடன் கூட்டணி என்பது ஆதாரமற்ற தகவல் என தவெக தலைமை தெரிவித்து உள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆரம்பத்தில் தம்பி என்றும், மாநாட்டிற்குப் பிறகு விஜயை சரமாரியாக விமர்சித்தும் வந்தார். ஆனால், சீமானுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறி, நாதக உடன் கூட்டணியா என்ற நிலைக்கு இழுத்துச் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 119

    0

    0